Case 32-தராவீஹ், கியாமுல் லைல், தஹுஜ்ஜத்

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِ ييَفْقَهُوا قَوْلِي

رَّبِّ زِدْنِى عِلْمًا

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இன்று நாம் ஆராயப் போகும் விஷயம் ஆனது புனித ரமலான் மாதத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் நமது அன்றாட நாட்களில் மேற்கொள்ளக்கூடிய சுன்னத்தான தொழுகைகளான தராவீஹ், கியாமுல் லைல், தஹுஜ்ஜத் போன்றவை பற்றியது ஆகும். எம்மிடம் கேள்வி எழுப்பிய சகோதரி இத்தொழுகைகள் பற்றிய சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.

இத்தொழுகைகளின் வித்தியாசம் என்ன?

பெண்களாகிய நாம் தராவீஹ் தொழுகையை மஸ்ஜிதிலே தொழ வேண்டுமா? அதன் ரக்அத் எண்ணிக்கை எத்தனை?

முதலில் நாம் இத்தொழுகைகளின் வித்தியாசத்தை கண்டறிவோம். கியாமுல் லைல் என்பது ஒரு சுன்னத்தான தொழுகையை குறிப்பதாகும். இப்பதத்தின் அர்த்தத்தை நோக்கினால் இரவு தொழுகையை குறிப்பதாகவே அமைகிறது. அதாவது இஷா தொழுகைக்கு பின் அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையை குறிக்கிறது. கியாமுல் லைல் என்பது ஒரு பொதுவான சொல் ஆகும். இஷாவுக்கும் பஜ்ருக்கும் இடையிலான அனைத்து தொழுகைகளும் இதில் அடங்கும்.

தராவீஹ் தொழுகை என்பது ரமலான் மாதத்தில் இஷாவுக்கு பின் நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையை குறிப்பதாகும். இத்தொழுகை கியாமுல் லைல் இல் அடங்கினாலும் ரமலான் மாதத்தில் மட்டுமே இது நிறைவேற்றப்படும்.

அடுத்து தஹுஜ்ஜத் தொழுகையை பற்றி அறிந்து கொள்வோம். இதுவும் கியாமுல் லைல் இல் அடங்கும் தொழுகை ஒன்றாகும் . என்றாலும் இத்தொழுகை குறிப்பிட்ட பெயரைக் கொண்டு அழைக்கப்பட காரணம் இஷாத்தொழுகையை நிறைவேற்றிய பின் தூங்கி எழுந்து பின்னரே இதனை நிறைவேற்ற வேண்டும். என்றாலும் இத்தஹுஜ்ஜத் தொழுகையும் மற்றைய கியாமுல் லைல் தொழுகைகள் போன்று இஷாவுக்கும் பஜ்ருக்கும் இடையே நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

சூரா அல் இஸ்ரா17;79

“இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.”

சூரா அஸ் ஸஜ்தா-32;16

“அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.”

இத்தொழுகைகள் அனைத்தும் சுன்னத்தானவை ஆகும். இவைகள் பர்ளானவையோ வாஜிபானவையோ கிடையாது. தராவீஹ் தொழுகையின் ரக்அத்க்களை எடுத்துக்கொண்டால் இதில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இக்கருத்து வேறுபாடுகள் எமது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி பிரிவுகள் மேலோங்கி நிற்கிறது.

அல்லாஹ் அருளைக்கொண்டு அவ்வாறான பிரிவுகள் ஏற்படாமலிருக்க பிரார்த்தனை செய்வோம். தராவீஹ் ஒரு சுன்னத்தான அமல். அதனால் பல சர்ச்சைகள் உருவாகாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் நபியவர்கள் கூறிய, காட்டிய வழிமுறைகளை கையாள்வது மிகவும் முக்கியமானது. ஸஹாபாக்களின் வாழ்க்கை முறைகளும் நபியவர்கள் பின்பற்றியதாகவே இருந்தது.

🌻ரமழானில் நபி( ﷺ)அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “நபி ( ﷺ) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி( அவர்கள் ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்” என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்கள்.

🎓அறிவிப்பவர் ; அபூஸலமா

📔நூல் ;புஹாரி: 1147

🌻ஒரு மனிதர் நபி ( ﷺ) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு நபி ( ﷺ) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்று நபி ( ﷺ) அவர்கள் கூறினார்கள்.

🎓அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

📔நூல்: புகாரி 1137.

நாம் மேற்கூறிய இரண்டு ஹதீஸ்களை விளக்கத்தை பார்த்தால் நபியவர்கள் இத்தொழுகையின் ரக்அத்களை குறிப்பிட்டு இவ்வளவு தான் என்று நிறைவேற்றவோ அல்லது இவ்வளவு தான் தொழ முடியும் என்றோ கூறவில்லை. இதனை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். ஸஹாபாக்களும் வெவ்வேறு கணக்கில் தொழுகையை நிறைவேற்றி உள்ளார்கள். அப்போது நபியவர்கள் அவர்களை தடுக்கவும் இல்லை. இரண்டு இரண்டாக குறைந்த அல்லது கூடுதலான எண்ணிக்கையை கொண்டு தொழுது கொள்ள முடியும்.

நாம் செல்லும் மஸ்ஜித்களில் இருபது ரக்அத் தொழுகை நடத்துவார்கள் என்றால் அதில் 8 ரக்அத்தை மட்டும் தொழுதுவிட்டு பாதியில் வருவது வரவேற்க கூடிய காரியமல்ல. எமக்கு இதனால் எமக்கு பல நன்மைகளை இழக்க நேரிடலாம். நாம் இமாமை பின்தொடர்ந்து தொழுதால் கடைசிவரை அவரை பின்பற்றுவது மிகவும் அவசியம் ஆகும்.

🌻நபி ( ﷺ) அவர்கள் கூறுகின்றார்கள்:

“எவரொருவர் இமாம், அவர் முடிக்கும் வரை (தொழுகை) அவருடன் நிற்கின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் தொழுததன் நன்மை பதிவு செய்யப்படும் ”

📚 (அறிவிப்பாளர் அத் திர்மிதி 806 ;அல்- அலபானி(ரஹ்) அவர்களால் ஸஹீஹ் ( சரியானது) என்று வகைப்படுத்தப்பட்டது, ஸஹீஹ் அத் திர்மிதி 646)

பெண்கள் மஸ்ஜித்களில் தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? என்ற கேள்விக்கு விடை எமது வீட்டில் எமது அமல்களை செய்து கொள்வதே சிறந்ததாகும் எமது வீடே எமக்கு உரிய இடம். நபியவர்கள் பெண்கள் மஸ்ஜித்களில் தொழுகை நிறைவேற்றுவதை தடுக்கவில்லை. என்றாலும் ஆண்களுடன் கலப்பு நிலையை தவிர்த்துக் கொள்வது எமது கடமையாகும். இன்றைய சூழலில் நாம் நம்மை அல்லாஹ்வின் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

🌻மஸ்ஜிதுக்கு வந்து தொழுவதற்கு) உங்களுடைய பெண்கள் அனுமதி கேட்டால் அவர்களை தடுக்க வேண்டாம், அவர்களின் வீடு அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பினும், என்று நபி ( ﷺ) அவர்கள் கூறினார்கள்.

📘அபூ தாவூத் அல் சுனன்.

இன்ஷா அல்லாஹ் எமது அமல்களை ஏற்று எம்மை நல்வழியில் செல்வதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

Case 31-கடந்த ரமளானில் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவது

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِ ييَفْقَهُوا قَوْلِي

رَّبِّ زِدْنِى عِلْمًا

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

பெண்கள் ஆகிய எமக்கு ரமளான் மாதத்தில் நோன்பு விடுபடுவது பொதுவானது ஆகும். அவ்வாறு விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முன் எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் அதனை பிடிக்க முடியாது போனால் என்ன செய்வது? போன்ற கேள்விகளுக்கு விடை காணுவோம்.

2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்

ரமளான் மாத நோன்பு எமக்கு பர்ளான ஒன்றாகும். அதாவது கட்டாய கடமையானதும், இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றும் ஆகும். நாம் அன்றாடம் நிறைவேற்றும் பர்ளான ஐந்து நேரத் தொழுகை போன்றதே ரமளான் மாத நோன்பும் ஆகும். இந்த அருள்மிகு மாதத்தில் நோன்பு நோற்று அதிகளவில் நன்மை செய்து அதன் சிறப்பை அடைந்து கொள்ள வேண்டும்.

பருவமடைந்த ஆண், பெண் இருபாலாருக்கும் நோன்பு இருப்பது கடமையாகும்.

2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

நமக்கு நோய் காரணமாக அல்லது மாதவிடாய் காரணமாக நோன்பு இருக்க முடியாது இருப்பின் அதனை மறு வருட நோன்பு வரும் முன் நோற்று விட வேண்டும். இதனை அல்லாஹ் குர்ஆனிலும் நபியவர்கள் பல ஹதீஸ்களிலும் கூறியுள்ளார்கள். மறு வருட நோன்பு வரும் முன் சுமார் ஒரு வருட இடைவெளி உள்ள அந்நாட்டளில் அதனை நோற்று நிவர்த்தி செய்வதே சிறந்த முறையாகும்.

ஒருவேளை நோன்பை நிவர்த்தி செய்வது(அடுத்த நோன்பு வந்தடைந்த போதும்) முடியாது போனால் அல்லாஹ்விடம் தவ்பா மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனெனில் இது ஒரு பாவமாக கருதப்படுகிறது. விடுபட்ட நோன்புக்கு ஈடு செய்ய நோன்பு இருப்பது கட்டாய கடமையாகும். மேலும் நாம் விட்ட ஒவ்வொரு நோன்புக்கும் பித்யா(பிராயச்சித்தம்) கொடுக்க வேண்டும். நாம் விட்ட ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். அங்கு பரவலாக உண்ணக்கூடிய உணவு வகையை கொடுப்பதே சிறந்தது ஆகும். இவ்வாறான விடயங்களையே நாம் கடைபிடிக்க வேண்டும். ஆகவே நாம் விட்ட நோன்பை நோற்று பாவமன்னிப்பு செய்து பித்யாவும் கொடுப்பதே நாம் ரமளானில் விட்ட நோன்பிற்கான பரிகாரமாகும்.

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

Case 30- சுறுசுறுப்பான குழந்தையை சமாளிப்பது

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِ ييَفْقَهُوا قَوْلِي

رَّبِّ زِدْنِى عِلْمًا

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

💕இன்று நாம் அறிவுரை வழங்கப்போகும் விடயம் என்னவென்றால் மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தையை எவ்வாறு சமாளித்து கையாள்வது என்பது ஆகும். நம்மை நாடி கேள்வி எழுப்பியுள்ள தாய் கூறியதாவது:
தன் 5வயது குழந்தை துறுதுறுவென சுறுசுறுப்புடன் இருப்பதாகவும், எளிதில் கோபம் கொள்பவராகவும், தான் சொல்வது கேட்டு நடாக்காதவராகவும் இருக்கிறார். குழந்தையுடன் நெருங்கி சொல்லி கொடுத்தாலும் அதனை உதாசீனம் செய்கிறார்.அவரை நல்ல முறையில் கையாள வேண்டும் எனவும் அதற்காக ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுள்ளார்.

💞அல்லாஹ் ஒவ்வொருவரையும் வித்தியாசமாகவே படைத்துள்ளான்.நாம் பெரியவர்கள் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்த்தாலும் யாருமே செயலில் அல்லது உருவத்திலோ ஒரேமாதிரி இருப்பது சாத்தியமில்லை. இரட்டைப்பிறவிகள் ஆக இருப்பினும் பல விடயங்களில் அவர்களும் மாறுபட்டே காணப்படுவார்கள். சில விஷயங்களில் சிலர் ஒரே மாதிரி இருப்பினும் பெரும்பாலும் ஒவ்வொருவரும் வித்தியாசமாகவே இருப்பார்கள். கர்ப்பம் தரித்த நிலையை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு குழந்தையை சுமக்கும் தருவாயில் நமக்கு ஏற்படும் அறிகுறிகள் மாறுபட்டே காணப்படும். ஆகவே ஒப்பீட்டு ரீதியில் பார்த்தால் அனைவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக உள்ளனர். அல்லாஹ் நம் அனைவரையும் அவ்வாறே படைத்துள்ளான். அதேபோல் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாகவே இருப்பார்கள்.

💕ஒரே வயிற்றில் இருந்து வந்த குழந்தைள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருசில பிள்ளைகள் நல்ல சுறுசுறுப்புடன் எதிலும் ஆற்றல் உடையவர்களாகவும் இன்னும் சிலர் அமைதியான அப்பாவிகளாகவும் இன்னும் சில குழந்தைகள் எதற்கும் பயப்படும் உணர்ச்சிமிக்கவர்களாகவும் இருப்பது வழமையாகும். சிலர் அமைதியான சாந்தமான நிலையிலும் நல்ல ஆற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் நாம் கூறுவதற்கு பதில் கூறி அவர்களின் கருத்தை தெரிவிக்கும் திறனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு பிள்ளைகளின் செயல்களை எண்ணிட்டுக்கொண்டே போகலாம். பல குணதிசயங்களை கொண்ட குழந்தைகள் நம்மால் காண முடிகிறது. அவர்கள் இடையே உயர்வு மற்றும் தாழ்வுகள் இருப்பது பொதுவானது.

💞இங்கு 5 வயது குழந்தையை எடுத்துக்கொண்டால் சில நேரம் அவர் குருகிய கவனம் (ஷோட் எடேன்ஷன் ஸ்பான்)
என்ற நிலையில இருப்பவராக இருக்கலாம்.இந்த நிலை என்னவென்றால் குறிப்பிட்ட சில நேரத்திற்கு மாத்திரமே ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். ஒரு நேரத்தை கடந்தவுடன் அந்நிலையில இருந்து மாறி வேறு காரியங்களில் ஈடுபட செய்வார்கள். இது ஒன்றும் தப்பானதோ அல்லது பிழையானதோ அல்ல. இன்னும் கூறப்போனால் இது குறையும் அல்ல. ஆகவே இவர்களை கையாள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

💕இவ்வாறான குழந்தைகளை ஒரு நாளில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். வீட்டில் உள்ளே செயல்படுவது என்றால்
🛑வாசிப்பது, கதை கூறுவது, கதை கேட்பது, எழுதுவது போன்ற அவருக்கு முடியுமானவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
🛑வரைதல், நிறம்பூசி விளையாடுதல் போன்றவற்றில் ஆர்வத்தை வளர்க்க உதவ வேண்டும்.
🛑இன்னும் குழந்தைகள் விரும்புகிற க்லே போன்றவற்றை கொடுத்து அவர்களின் திறமையை வளர்க்க வேண்டும்.
🛑வெளிப்புற நடவடிக்கை என்றால் அவர்களின் ஆர்வம் கூடுதலகவே இருக்கும். இவ்வாறான திறந்த வெளி செயற்பாடுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
🛑 அவரின் வயதுக்கேற்றவர்களோடு அவரை விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடுத்தல் அவசியம்.

💞குழந்தைகளின் ஆற்றல் , திறமைகளை கண்டறிந்து ஊக்கமளிக்க வேண்டும். இன்னும் புதுபுது அறிவை வளர்க்கும் நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட செய்தல் காரணமாக அவர்களின் அறிவுத்திறன் வளர்வதோடு , புதியதினால் சலிப்பின்றி செயல்படுவார்கள். அடிப்படையில் இயற்கையோடு அவர்கள் செயற்பட நாம் வழிவகுக்க வேண்டும். சில நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து கோபம் மூலம் அதனை வெளிக்காட்டுபவராக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல முறையில் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து விளையாட வழிவகுக்க வேண்டும்.
🎋ஆதார பூர்வமான ஹதீஸில் அறிவிப்பதாவது:
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்;
“ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும்.’
📚{அபூ தாவூத் + திர்மிதி}

💕தொலைக்காட்சி பார்ப்பது கூடாத காரியமல்ல. என்றாலும் அதற்கு ஒரு எல்லை உண்டு. உங்கள் குழந்தை தன் தோழி வீட்டுக்கு காட்டூன் பார்க்க செல்வதாக கூறியுள்ளீர்கள். அவ்வாறு அங்கு செல்லாது உங்கள் கண்முன் என்ன பார்க்கிறார் என்ற நிலைக்கு உங்கள் வீட்டிலே அவரை தொலைக்காட்சி பார்க்க செய்வது நல்லது. உங்களுக்கு அவரை கண்காணிக்க முடியும். சிறியவர்களின் ஆக்கத்திறனை வளர்க்க கூடிய பல ஊடக நிகழ்ச்சிகள் உள்ளன. இன்னும் தொலைக்காட்சி செனல்களும் உள்ளன. எதுவும் எமது மார்க்கத்துக்கு முரணாணதாக இருக்க கூடாது. எது செய்தாலும் அல்லாஹ் எவ்வாறு நம்மை நன்மை செய்ய கூறி உள்ளானோ அவ்வாறே நாம் செயல்பட வேண்டும். பிள்ளைகளுக்கு பயன்தரும் சில
📺இஸ்லாமிய Channels ;
📀Muslim kids tv
📀Zaky
📀Baba Ali
📀Misri Bunch

💞நாம் பிள்ளைகளுக்கு மதிப்பளித்து நடந்து கொண்டால்தான் அவர்களும் எங்களுக்கு மரியாதை தர பழகுவார்கள். நம்மை நாடி வரும் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் கூறுவதை செவிமடுத்து நாம் அவர்களுக்காக அவர்கள் பக்கத்தில் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவது மிகவும் தேவையான ஒன்றாகும். அவர்களின் அன்றாட காரியங்களை நல்ல முறையில் செய்வதற்காக ஒரு பட்டியல் போட்டு அதன்படி நடக்கச்செய்வது மிக வரவேற்க தக்கது. சிறு வயது தொடக்கம் ஒழுக்க கட்டுப்பாடுடன் வளர்வது மிகவும் அவசியம். இஸ்லாமிய கட்டுக்கோப்புக்கு அமைய பிள்ளைகள் வளர வேண்டும். அதனை நாம்தான் அவர்களுக்கு பழக்க வேண்டும். கூடுதலாக கண்டிப்பதை தவிர்க்க வேண்டும்.எதனையும் அன்பாக அவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி கொடுக்க வேண்டும்.

🎋நான் பத்து ஆண்டுகள் அல்லாஹ்வின் தூதர் ( ﷺ) அவர்களுக்குப் பணியாற்றும் ஊழியனாக இருந்து இருக்கின்றேன். ஒரு சந்தர்ப்பத்தில் கூட என்னை அவர்கள் இகழ்வாக அழைத்ததும் இல்லை. குறைவாக ஏசியதும் இல்லை! ‘இதை ஏன் செய்தாய்? இவ்வாறு ஏன் செய்யவில்லை?’ என்று ஒருபோதும் என்னைக் கேட்டதுமில்லை! சொந்தப் பிள்ளையைப் போன்றே என்மீது அன்பு செலுத்தினார்கள். ஆதரவு அளித்தார்கள்!
📌அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக்(அவர்களது சிறு பருவத்தை நினைவு கூறும் போது)
📚{ஸஹீஹ் அல் புகாரி}

💕நல்ல பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்தி செய்தல் வேண்டும். ஒருசில நாட்கள் செய்துவிட்டு பின் விட்டு விடக்கூடாது. அவர்கள் அடம்பிடித்து கேட்பது எல்லாவற்றையும் செய்யாது போனாலும் சிலவற்றை நல்ல முறையில் எடுத்துக்கூறி செய்ய வேண்டும் ஏதும் வாக்களித்தால் கட்டாயம் நாம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதில் தம்மை பற்றிய நல்ல எண்ணம் உருவாகும்.தாழ்வு மனப்பான்மை உருவாகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு வயதிலே மனம் வருந்தும்படி ஏதும் நடந்து விட்டால் அவை அவர்களின் மனதை பாதித்து விடும். அன்போடும் பாசத்தோடுமே அவர்களை அணுக வேண்டும்.

💞அவர்களுக்கு நபிகளாரின் வரலாறுகள் ஸஹாபாக்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை பிள்ளைகள் விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்தில் கூற வேண்டும். நற்பண்புகளை நடைமுறையில் நாம் கடைப்பிடித்து அவர்களுக்கும் கடைப்பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
💜《6;160》 எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு;

💕பிள்ளைகள் கோபப்பட்டு நடக்கும்போது அதற்கான காரணத்தை அறிய முயற்சிக்க வேண்டும். நல்ல முறையில் பேசி அதனை நாம் அறிந்து கொண்டு அன்பாக அறிவுரை வழங்க வேண்டும். அல்லாஹ்வை நினைத்து திக்ர்களை சொல்வதை நடைமுறைப்படுத்த வேண்டும். அல்லாஹ்விடம் நன்மையை நாடி நமது காரியங்களில் ஈடுபட வேண்டும். பிள்ளைகளுக்கும் அது உணரும் விதத்தில் நாம் நடக்க வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை முறையை எமது அன்றாட அனைத்து காரியங்களிலும் நடைமுறைப்படுத்தி வாழ்வது மிக தேவையான ஒன்றாகும்.

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ💞

Case 29- குடும்ப கட்டுப்பாடும் கருக்கலைப்பும்

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِ ييَفْقَهُوا قَوْلِي

رَّبِّ زِدْنِى عِلْمًا

☘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

🍃பெண்கள் என்ற ரீதியில் அதுவும் குடும்பமாக வாழும் நாம் முக்கியமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய சில ஆலோசனைகளை வழங்கவே கேள்விகள் எம்மை வந்தடைந்துள்ளன.
❓கர்ப்பம் தரிக்கும் நிலையை தடுப்பதற்கான முறைகளை கையாள்வது கூடுமா? இப்போதுள்ள நவீன முறைகளை பயன்படுத்தலாமா? அதுபற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?
❓இஸ்லாமிய பார்வையில் கருக்கலைப்பு
❓கருவுற்ற நிலையில் பிள்ளைக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அதன் காரணமாக கருக்கலைப்பு செய்தல் ஆகுமா?

🍂முதலாவதாக குடும்பக் கட்டுப்பாடு செய்வது இஸ்லாமிய ரீதியில் பார்த்தால் நிரந்தரமாக அவ்வாறு செய்து கொள்வது பிழையானதும் ஹராமானதும் ஆகும். அதற்கான அறுவை சிகிச்சை அல்லது அதைபோன்ற நிரந்தர வழிமுறைகளை கையாள முடியாது.

☘நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள்;
அன்பான மற்றும் குழந்தை வளமான பெண்களை திருமணம் செய்யும்படி கூறுகிறேன், ஏனெனில் உங்களின் எண்ணிக்கை மற்றைய மக்களின் எண்ணிக்கையை விட பெருந் தொகை யாக இருப்பதைக் கொண்டு நான் பெருமை கொள்கிறேன்.
⭕ஆதாரம்
🔅{வகைப்படுத்தப்பட்ட ஸஹீஹ் அல்- பாணி இர்வா அல்-கலீல் இலிருந்து 1784}‏‎

🍂ஆகவே நாம் எவ்வித நவீன முறையின் ஊடாகவோ இதனை செய்தல் ஹராமாகவே கருதப்படுகிறது. என்றாலும் தாயின் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் இருப்பின் அல்லது அவருக்கு கருவுறும் நிலை முடியாது இருப்பின் (நோய் காரணமாக) இவ்வாறு கட்டுப்பாட்டு முறைகளைக்கொண்டு தடுத்துக்கொள்ள முடியும். அவை சரியான உகந்த நிலைமையாக இருத்தல் அவசியம்.
தற்காலிக கட்டுப்பாடுகளை செய்வதற்கு இஸ்லாம் அனுமதி தந்துள்ளது.

☘ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ( ﷺ) அவர்களது காலத்தில் “புணர்ச்சி இடை முறிப்பு”(அஸ்ல்) செய்து கொண்டிருந்தோம். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுக்குத் தகவல் எட்டியபோது, அவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை.
⭕ஆதாரம்:
🔅புஹாரி=5209
🔅முஸ்லிம்=2847

🍂தற்காலிக தடை முறைகளை அனுமதி வழங்கி இருப்பினும் அவற்றின் காரணம் நியாயமானதாக இருத்தல் வேண்டும் .உதாரணமாக ஒரு பிள்ளைக்கும் மற்றைய பிள்ளைக்குமான இடைவெளி இருக்க வேண்டும் என்ற நோக்கம் போன்றவை. சில நிபந்தனைகளுக்கு அமையவே இஸ்லாம் இத்தற்கால முறையை அனுமதித்துள்ளது. இதில் கணவன் மனைவி இருவரின் விருப்பமும் இருத்தல் அவசியம் ஆகும். ஒருவரின் விருப்பத்திற்கு அமைய இதனை நடைமுறைப்படுத்தல் கூடாது. இம்முறையை கையாள்வதால் யாருக்கும் தீங்கு ஏற்படாது இருத்தல் வேண்டும். மனதளவில் அல்லது உடல் ரீதியாகவோ எவ்வித தீங்கும் ஏற்பட கூடாது. அனுமதிக்கப்பட்ட ஹலாலான முறைகளை கையாள்வது மிகவும் முக்கியமானது. இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் குடும்பக் கட்டுப்பாடு சில நிபந்தனைகளுக்கு அமைய செய்து கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது என்பதே ஆகும்.

🍃அடுத்த கேள்வியான கருக்கலைப்பு பற்றி இஸ்லாம் கூறுவது யாதெனில் அது அனுமதிக்கப்படாதது என்றுதான் கூறவேண்டும்.சில மார்க்க அறிஞர்கள் மத்தியில் இதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது. சிலர் 40 நாட்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனவும் மற்றவர்கள் அதுவும் அனுமதிக்கப்பட்டதல்ல என்பதே அவர்கள் மத்தியில் உள்ள எண்ணங்கள். என்றாலும் நாம் பாதுகாப்பான பக்கத்தை தேர்ந்தெடுப்பது நேர்மையாக அமையும்.

وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا‏

🍁நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
♻[அல்-இஸ்ரா 17:31]

🍂அல்லாஹ் நமக்கு தரும் ரிஸ்க் யைப் பற்றி நாம் கவலைப்பட கூடாது .அவன் படைத்த ஒவ்வொருவருக்கும் அவனே ரிஸ்க் யை அளிப்பவன். குழந்தை செல்வத்தை வழங்கும்போது அதற்கான பரக்கத் யையும் சேர்த்தே எமக்கு அருளுவான்.

🍃இங்கு 40 நாட்களை நாம் கணக்கில் எடுக்க காரணம் முதல் 40 நாட்களில் ஆண் பெண் இருவரின் இந்திரிய கலப்படத்தினால் நுத்பாஃ என்ற நிலை உருவாகி இருக்கும்.அதனை தொடர்ந்து 40 நாட்களில் அலகா எனும் நிலைக்கு மாறுகிறது. இதனையே சதைக்கட்டி என குறிப்பிடுவோம்.பின் அடுத்து வரும் 40 நாட்களில் முத்கா எனும் நிலையை அடைகிறது .அதாவது பாதி உருவாக்கப்பட்டு மற்றது உருவாக்க படாத நிலையாக இருக்கும். பின்னரே அதற்கான ஒழுங்கான உருவ அமைப்பை அல்லாஹ் வழங்குவான். பின்னர் ரூஹையும் வழங்குவான். இவ்வாறே ஒரு குழந்தையை அல்லாஹ் உருவாக்குகிறான். இவ்வாறு அற்புதமாக படைக்கப்படும் ஒன்றை எவ்வாறு இல்லாமல் செய்வது?

🍂அத்தியாவசிய சில காரணங்களுக்கு அமைய நாம் கருக்கலைப்பு செய்யும் நிலை உள்ளது. தாயின் உயிருக்கு ஆபத்தாகும் என்ற நிலை மட்டுமே இதனை மேற்கொள்வது கூடும். அதுவே 40 நாட்களுக்குள் செய்வதை குறிக்கும். சிலர் கட்டுப்பாட்டு முறைகளை கையாண்டு விட்டு பின் குழந்தை தேவை என நிலைக்கு வரும்போது குழந்தை கிடைக்காமல் போகும் பல சந்தர்ப்பங்களை காண முடிகிறது. குழந்தை செல்வம் அல்லாஹ்வினால் நமக்கு அளிக்கப்படும் விலைமதிக்க முடியாத பரிசு. அது ஒரு அருளும் கூட. இறைவன் தரும் போது அதனை பெற்றுக்கொள்வதே சிறந்தது.

🍃அடுத்ததாக வயிற்றில் வளரும் பிள்ளையின் வளர்ச்சியில் ஏதும் குறைபாடுகள் இருந்து அதற்காக கருக்கலைப்பு செய்தல். இவ்வாறான நிலையும் அனுமதி மறுக்கப்பட்டது ஆகும்.இதில் தாய்க்கு ஏதாவது ஆபத்து இருக்கும் நிலை இருந்தால் தவிர வேறு எந்த நிலையிலும் கருக்கலைப்பு செய்தல் கூடாது. அல்லாஹ் சிலருக்கு குழந்தைகளால் சோதனைகளையே வழங்குவான். அவற்றை முகங்கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். குழந்தையின் குறைபாடுகள் காரணத்தை வைத்து எமக்கு இப்படியான தீர்வை எடுக்க முடியாது. எமக்கு சோதனைகளை தந்து அதனை எவ்வாறு நாம் கையாள்கிறோம் என்பதையும் அல்லாஹ் பார்ப்பான்.

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ؕ
🍁அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை;
♻[அல்-பகரா 2: 286]

🍂ஆகவே அவனது சோதனைகளை ஏற்று அதற்கு அமைய நன்மைகளை செய்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ💐

Case 28- தோல்வி என்ற உணர்வு

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِ ييَفْقَهُوا قَوْلِي

رَّبِّ زِدْنِى عِلْمًا

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

கேள்வி:
வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் தோல்வி அடைந்து விட்டதாக நம்புவதாகவும் எதிலும் நிலையாக இருந்ததில்லை என்று கூறும் ஒரு சகோதரியின் மனக்கவலையை தீர்க்க ஆலோசனைகளை வழங்குமாறே நம்மை நாடியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பாடசாலை பரீட்சைகளில் சித்தியடையாமை தான் மேற்கொண்டு படிப்பை தொடர முடியாது இருப்பதுடன் தனக்கு படிக்க ஆசை இருப்பினும் அது பயனளிக்காது தோல்வி அடைவேன் என்ற உணர்வோடு இருப்பதுடன் தனது சக தோழிகள் படிப்பை தொடர்வதாகவும் கூறுகிறார். இவரது இந்நிலையை யாருடனும் பகிரவில்லை எனவும் தமக்கான ஆலோசனைகளை நம்மிடம் கேட்டுள்ளார்.

ஆலோசனைகள்:
✨அல்லாஹூதஆலா நம் ஒவ்வொருவரையும் படைத்து நமக்கு அவரவருக்கு ஏற்றவாறு அனைத்தையும் கொடுத்து வேறுபட்ட திறமைகளையும் அளித்துள்ளான். அவனது அருளினால் அதனைக்கொண்டு நமக்கு சாதனைகளை படைக்க முடியும். அவரவர் ஆர்வம், தேவை, திறமை போன்றவற்றை பொறுத்து அவர்களின் வாழ்வில் வெற்றிகளை பெறலாம்.

❄️முதலாவதாக நமது மனதில் இருக்கும் “தோல்வியில் இருக்கிறோம்” என்ற உணர்வை மாற்ற வேண்டும். இன்னும் இவ்வாறான எண்ணமும் வரக்கூடாது. இது ஷைத்தானின் சூழ்ச்சி. நம்மை நாமே தாழ்மை நிலைக்கு கொண்டு வருவதற்கான நிலையே இவ்வாறான எண்ணங்களை எமது மனதில் பதிய செய்கிறான். அவனது நோக்கம் மனிதனை கீழ்தரமான நிலைக்கு தள்ளுவதே. அவனது சிந்தனைகளுக்கு எமது மனதில் இடம் அளிக்க கூடாது. என்று எவ்வளவு தூரம் மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவுக்கு தேவையான நிலைகளை உருவாக்குவான். நாம்தான் கவனமாக இருக்கவேண்டும் .நம்மை பற்றி நல்லபடி நினைக்கும் நிலைகளை ஷைத்தான் உருவாக்க மாட்டான். இவ்வாறான எதிர்மறையான எண்ணங்களை எமக்கு ஏற்படுத்தி வெற்றி காண முயற்சி செய்வான்.

✨நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அவனது எதிர்மறையான சிந்தனைகளை எம்மில் வளரச்செய்யாது, அதன்படி மனதை அலையவிடாது இருக்க வேண்டும். அல்லாஹ்விடம் தவக்கல் வைத்து நன்மையை நாடி ஈமானின் உறுதியுடன் நேரான எண்ணங்களை மனதில் உருவாக்க வேண்டும்.

❄️பலருக்கு கல்வி கற்க ஆசையிருக்கும் , ஆனாலும் அதனை சரிவர செய்து கொள்ளக்கூடிய திறமைகள் இல்லாது இருக்கும். ஆனாலும் அவருக்கு வேறு திறமைகளை அல்லாஹ் வழங்கி இருப்பான். இன்னும் பயம், ஞாபக மறதி, பதற்றம் போன்ற பிரச்சினைகள் காரணமாகவும் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இருப்பின் அதனை சரி செய்வதற்கான முயற்சிகளை கையாள்வது அவசியம். எமது ஆர்வமும் கல்வி கற்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

✨உதாரணமாக ஒருவருக்கு வைத்திய துறையில் மேற்படிப்பை தொடர விருப்பமில்லை என்றாயினும் அவர் அதனைப் பற்றி அறிந்து கொள்ள கூடிய ஆர்வம் உள்ளவராகவும் அதன்மூலம் பலருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் இருப்பதால் அவர் அத்துறையை தேர்ந்து எடுக்கலாம். என்றாலும் இதனை தொடர்ந்து செய்து பின் பரீட்சைகளில் நல்லபடி சித்தியடையாது போவோம் என்ற எண்ணம் இருப்பின் அல்லது உறுதியாக அவ்வாறு தான் நடக்கும் என்று இருப்பின் அவர் அதனை தேர்ந்து எடுப்பது நன்மையானது அல்ல. ஆர்வம் என்பது வேறு மற்றும் திறமை என்பது வேறு.

❄️எமது திறமைகளை நாம் கண்டறிய வேண்டும்.
நீங்கள் உங்களது ஓய்வு நேரத்தை ஒதுக்கி கீழ்வருபவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
💧 நீங்கள் எதனை செய்தால் அது உங்களுக்கு நன்மையாக அமையும் என ஒரு பட்டியல் தயாரிக்கவும். இதில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுதுங்கள்.
💧இதனால் எமது எதிர்கால இலட்சியம் எவ்வாறு அமையும் எனவும் குறிப்பிடலாம்.
💧 இப்போது உங்கள் பட்டியலில் இருந்து நீங்கள் கூடுதலாக விரும்புகிற ஒரு 5 யை தேர்ந்தெடுங்கள். நீங்கள் எடுப்பது எந்நேரத்திலும் உங்களால் செய்ய முடியும் என்ற நிலை இருக்க வேண்டும்.
💧பின் உங்களுக்குப் பிடித்த அந்த திறமையை எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும் என ஆலோசனை செய்யுங்கள்.

✨இவ்வாறான நிலைகளை உருவாக்கி உங்களின் ஆர்வம் திறமைக்கேற்ப ஒரு துறையில் வெற்றியை காணலாம் இன்ஷா அல்லாஹ். உங்களுக்கு உள்ளே ஒரு நம்பிக்கை தன்மை உருவாக இது வழி வகுக்கும். உங்களது திறமைகள் வெளிவரும் போது உங்களைப் பார்த்து நீங்கள் பெருமை அடையும் நிலை உருவாகலாம். அல்லது மற்றவர்களின் கருத்துக்களுக்கு அமைய உங்களுக்கு அப்படியான சிந்தனை ஏற்படலாம்.

❄️அல்லாஹ் நேர் மறையான நிலையை உருவாக்கி உங்களிடமிருந்து உங்கள் செயல் திறன்களை வெளிக்காட்ட செய்திடுவான். மேன்மேலும் பரக்கத் செய்வான். எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்பது நமது கடமை ஆகும் . அதன்மூலம் எமக்கு எவ்வித நன்மையும் கிடைக்க போவதில்லை. படிப்பு என்பது மட்டுமல்ல வாழ்க்கை. அது வாழ்க்கைக்கு பலம் தருமே தவிர அது வாழ்க்கை அல்ல. எமது திறமைகளைக்கொண்டு சாதனைகளை புரிய முயற்சிக்க வேண்டும். அனைத்துக்கும் எம் மேல் நாம் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும். அவன் எமக்கு அருளியவற்றை எமது நிலைகளை உயரச்செய்ய நல்ல முறையில் பயன்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

Case 27 – இஸ்லாமிய சூழலில் குழந்தை வளர்ப்பு

أعوذ بالله من الشيطان الرجيم

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ 

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏  يَفْقَهُوْا قَوْلِیْ

رَّبِّ زِدْنِى عِلْمًا

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு 

❓நமது குழந்தைகளை எவ்வாறு  இஸ்லாமிய சூழலில் வளர்ப்பது

❓இப்போதுள்ள டெக்னாலஜி கேட்ஜெட்களில்(தொழில் நுட்ப சாதனங்கள்) மூழ்கியிருக்கும் பிள்ளைகளை அதிலிருந்து எவ்வாறு வெளியேற்றி கொள்வது

❓இன்னும் பெற்றோரை மதித்து அவர்கள் சொல் பேச்சு கேட்காது நடப்பவர்களை எவ்வாறு கையாள்வது

🖋மேற்கூறியவற்றை எவ்வாறு கையாண்டு பிள்ளைகளை நல்வழிக்கு கொண்டு வரும் சில வழிமுறைகளை பார்ப்போம்.

🖌பிள்ளைகள் ஸ்பொன்ஞ்(கடற்பஞ்சு) போன்றவர்களே. அது நீரை எவ்வாறு  உறிஞ்சிக் கொள்கிறதோ அவ்வாறே  எமது நடவடிக்கைகளை கண்டு அவ்வாறே நடக்க முற்படுவார்கள். சிறு வயதில் எதனையும் கேட்டு தெரிந்து கொள்வதை விட பார்த்து பல விஷயங்களை பழகிக்கொள்வார்கள். பெரியவர்கள் செய்வதை நன்றாக கவனித்து  தானும்  அவ்வாறு நடப்பதையே விரும்புவார்கள். ஒரு குறிப்பிட்ட  வயது வரும்வரை  இவ்வாறே செயற்படுவார்கள். அதன்பின்னரே சொல் கேட்டு நடக்க தொடங்குவார்கள். ஆகவே இங்குதான் பெற்றோர் ஆகிய நாம் கவனமாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக  இருப்பதே பெற்றோர்களின் தலையாய கடமையாகும். நாம் எமது பிள்ளைகள்  வருங்காலத்தில்  எவ்வாறு  இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அவ்வாறே நாம் நடக்க வேண்டும்.

🔳அறிவிப்பவர் : சாத் இப்னு ஹிஷாம்

🏁ஒரு முறை  நான்

“இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (ஓதியிருக்கி றேன்)” என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள்,”நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்றார்கள்.

🖋நாம் நல்ல குணம் நிறைந்த இஸ்லாமிய வழிமுறைகளை  பின்பற்றும்  பெற்றோராக இருப்பது மிகவும் அவசியம். நபியவர்களின் வாழ்க்கை  முறை குர்ஆன் கூறிய வழியில் அமைந்து இருந்ததே அவர்களின் பிள்ளைகளும் அதனை பின்பற்ற காரணமாக இருந்தன.

நபியவர்களின்  மகள்களான ஸைனப், உம்மு குல்தூம், ருகையா, ஃபாத்திமா ஆகியோர் நற்பண்புகளில் சிறந்தவர்களாகவே காணப்பட்டனர். இவர்கள் நற்குணம்  கொண்ட மகள்களாக மட்டுமின்றி  பொறுப்புள்ள மனைவிகளாகவும் செயல்பட்டார்கள். நபியவர்களின் பிள்ளை வளர்ப்பு முறையில் இருந்து எமக்கு படிப்பினை  பெற எண்ணிலடங்கா நிகழ்வுகள் உள்ளன. அவர்கள் மிகவும் பொறுமையுடனே செயல்பட்டார்கள். எதனையும் சத்தம் போட்டு அதட்டி கூறாது மென்மையாக நல்ல முறையில்  எடுத்துக் கூறுபவர்களாகவும் அவ்வாறு நடப்பவர்களாகவும் இருந்தார்கள்.தனது வாழ்க்கை முறையை தனது உம்மத்தும் பின்பற்றும் படியே வாழ்ந்து காட்டினார்கள்.

🏁இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் நிலத்தில் நான்கு கோடுகளை வரைந்துவிட்டு தம் தோழர்களிடம் “இது என்னவென்று தெரியுமா? என வினவினார்கள்.அதற்கு தோழர்கள்”அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் ” என்றனர்.அதற்கு நபி(ஸல்) அவர்கள் பெண்களில் சிறந்த சுவர்க்கத்து பெண்களான  இம்றானின் மகள் மர்யம், குவைலிதின் மகள் கதீஜா, மஸாஹிமின் மகள் (பிர்அவ்னின் மனைவி) ஆஸியா மற்றும் முஹம்மதின் மகள் பாத்திமா.” ஆகியோர் ஆவார்கள்.

▪முஸ்னத் அஹ்மத் 2663

🖌மேற்கூறிய ஹதீஸை அவதானித்தால் இங்கு குறிப்பிட்டுள்ள நால்வரின் வாழ்க்கை முறையை  பார்த்தோம்  என்றால் அவர்கள் நற்பண்புகளில் சிறந்தவர்களாகவே காணப்பட்டார்கள். அனைவரும் மிகவும் பொறுமையுடனும் நற்குணங்களை  கொண்டவர்களாகவும் தமது கடமைகளில் கண்ணும் கருத்துமாகவும் பல கஷ்டங்களை சந்தித்தாலும்  அல்லாஹ்  கூறியபடி வாழ்ந்து காட்டியவர்கள் ஆவார்கள்.

🖋இப்போது உள்ள கால கட்டத்தில்  இந்த தொழில் நுட்ப சாதனங்களின் உபயோகம் இன்றியமையாததாக உள்ளது.டிவி,லெப்டொப்,மொபைல்போன், ஐபேட், என இந்த சாதனங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.  இவற்றின் பாவனை தவிர்க்க முடியாத ஒன்றாகவும் காணப்படுகிறது. இவை அனைத்தும்  எல்லோரிடமும் எல்லா சாதனங்களும்  இருப்பது சாத்தியமாகதது ஆயினும் ஒன்றாவது இருக்கும்  என்பதே உண்மையாகும். இன்டநெட் என்பது  அனைத்து உலக ளாவிய விடயங்களுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகவே காணப்படுகிறது. இவற்றை பயன்படுத்தாது இருப்பவர்கள் குறைவு  என்றுதான் கூறமுடியுமே தவிர இல்லை என கூற கடினமாக இருக்கும்.

🖋இவற்றின் பாவனைகள் நன்மை, தீமை இரண்டையும் தருவதாக அமைகிறது. அதனை பாவிப்பவர்களின் கையிலே  அது அடங்கியுள்ளது. நமக்கு பல தேவையான நன்மையுள்ள விஷயங்களை எமக்கு இவை தருவது போல் எம்மை தீமையான விடயங்களிலும் இழுத்துச்செல்ல வழி வகுக்கும் ஆற்றல் உடையது.

🖌நவீன உலக  வாழ்க்கை முறையில் பல பெற்றோர்கள் வேலை செய்பவர்களாகவே காணப்படுகின்றனர். அந்நிலையில் தம் பிள்ளைகள பராமரிக்கும் காரணமாக யாராவது ஒருவரை வைப்பது வழமையாக உள்ளது. ஆயினும் சில வீடுகளில் இந்த தொழில் நுட்ப சாதனங்களே பிள்ளைகளை கவனிக்கும் நிலைகள் உருவாகியுள்ளன.

பிள்ளைகளை இதனைவிட்டும் ஒதுக்கி வைக்க  முடியாத நிலையே உள்ளது. என்றாலும்  அவர்கள் இவற்றை பாவிக்கும் நேரத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் பாவனைகள் பழக்கமாகவோ அல்ல இதற்கு  அடிமையாகவோ  இருக்கும் நிலை ஏற்படாது பார்த்துக்கொள்வது நமது கடமையாகும். பிள்ளைகளின் சிந்தனைகளில் பாதிப்பு ஏற்பட இவற்றின் பாவனைகள் காரணமாக அமைய வாய்ப்புக்கள் அதிகம்.

🖋பெற்றோர்  இதன் பாவனைகளை கட்டுப்படுத்தி மற்றைய விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் சில வழிமுறைகளை  கையாளலாம்.

👁‍🗨பிள்ளைகளுக்கு நாம் போதிப்பதை எமது செயலில் காட்ட வேண்டும்.

(எவற்றை  நாம் கற்றுக் கொடுக்கிறோமோ / சொல்லிக் கொடுக்கிறோமோ அதனை நாம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.)

👁‍🗨சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்

( எமது நடவடிக்கைகளை கண்டு எம்மை போல் அவர்கள் வர வேண்டும் என்ற ஆசை வரும் விதத்தில் நாம் இருக்க வேண்டும். நபியவர்களின்  ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் நாம் வாழ வேண்டும்.)

🔳அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

🏁நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்.” 

▪ஸஹீஹ் புகாரி, 

▪ஸஹீஹ் முஸ்லிம்

👁‍🗨பெற்றோர் தம் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். 

(இப்போதைய காலத்தறுவாயில் நேரம் கிடைப்பது இலகுவான காரியமல்ல. ஆனால்  எமது பிள்ளைகளுக்காக நாம் நேரம் ஒதுக்கி அவர்களுடன் கதைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது நேரத்தை செலவிட வேண்டும்.)

👁‍🗨அவர்களின் தேவைக்கேற்ப சரியாக அவர்களை நடத்த வேண்டும். 

(சில செயல்களை செய்விக்க அதற்கு பதிலாக ஏதாவது ஒரு பொருளை தருவதாக வாக்களிப்பது. இப்படி நடப்பதால் பொருள்களுக்காகவே எதனையும் செய்யலாம் )

👁‍🗨மதிப்பை கண்ணியத்தை  அவர்களாகவே நமக்கு வழங்க நாம் நடக்க வேண்டும். 

(பிள்ளைகளுக்கு நாமும் மரியாதை அளித்து அவர்களின் ஆசைகளை மதித்து செயல்பட்டால்தான் அவர்களிடமிருந்து  மரியாதையை எமக்கு பெற முடியும்.)

👁‍🗨கூடுதலான கட்டுப்பாட்டு நிலைகளை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும்.

(சில நன்மை பயக்கும் ஆசைகளுக்கு , சந்தோஷங்களுக்கு இடமளிக்க வேண்டும். அதன் நன்மை தீமைகளை அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டும்.)

👁‍🗨பிள்ளைகளுக்கு வாசிப்பு திறனை அதிகரிக்கும்  நிலையை உருவாக்க வேண்டும். 

(இதன் மூலம் அவர்கள் பல வழிகளில்  நல்ல  விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.வீட்டில் சிறிய ஒரு புத்தகசாலை உருவாக்கி அதில் பல தரப்பட்ட நல்ல நூல்களை சேர்த்து வைத்து குறிப்பாக இஸ்லாமிய நூல்களை வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.)

👁‍🗨அவர்களின் திறமையை வெளிப்படுத்த இடம் அளிப்பது மிகவும் அவசியம்.

(நமது ஆசைகளுக்கேற்ப செயற்படாமல் அவர்களுக்கே முன்னுரிமை  வழங்க வேண்டும்.)

👁‍🗨அவர்களது இந்த தொழில் நுட்ப சாதனங்களின் அடிமையாதலை ஒரேயடியாக அனைத்தையும் இதுதான்  இப்படிதான் என்று அவர்களை 

விதிமுறைகளுக்குள் தள்ளாது மெல்லமாக சிறுசிறுதாக நன்மையான வழிக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். 

🖌பிள்ளைகளின் திறமையை இஸ்லாமிய வழிமுறைகளுக்கு ஏற்ப வெளிபடுத்த நாம் உதவி செய்ய வேண்டும். அல்லாஹ்  கூறிய வழிமுறைகளை கையாள அவர்களை பழக்கப்படுத்திக்கொள்ள நாம் வழிவகுக்க வேண்டும். இஸ்லாம் கூறும்  வாழ்க்கை முறையையும் நமது வாழ்க்கை முறையையும் வேறுபடுத்தி வாழக்கூடாது. ஒவ்வொரு  நடவடிக்கையும் இஸ்லாமிய வழியிலே இருக்க வேண்டும்.  எமது ஊக்குவிக்கும்  முறை நல்லதாக அவர்களுக்கு ஆர்வம் தரும் விதத்தில் நாம்தான் செயல்பட வேண்டும். எதுவாயினும் இஸ்லாத்துக்கு  முதலிடம் நாமும் கொடுத்து அவர்களையும் கொடுக்க வழி செய்ய வேண்டும்.  

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ💐

சிகிச்சைக்காக மார்க்க அறிஞர்களை நாடுவது

أعوذ بالله من الشيطان الرجيم

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏
وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ يَفْقَهُوْا قَوْلِیْ

رَّبِّ زِدْنِى عِلْمًا

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

❓❓தமக்கு உடம்பில் ஏதும் சுகம் குறைவாக அல்லது கணவன்-மனைவி இடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டு அதற்காக தீர்வு காணும் முகமாக மார்க்க அறிஞர்களை(ஹஸரத்மார்கள், ஷேக்மார்கள், அவ்லியாக்கள் ) நாடிச் செல்வது கூடுமா? இன்னும் இது போன்றவர்களிடம் சென்றால் பெயர் அல்லது தாயின் பெயர் போன்றவற்றை அறிந்து அதனைக்கொண்டு தீர்வு தருபவர்களாகவும் அல்லது ஜின் இன் மூலம் பிரச்சினை தீர பதில்கள் தருவதாகவும் கூறுவார்கள்.இவ்வாறான முறைகளை நாம் கையாள்வது கூடுமா?
ஒரு சகோதரியின் கேள்விகளே இவை.

💡இந்த கேள்விகளுக்கான பதில்களை இரண்டு முறைகளை வைத்து பார்ப்போம். அதாவது எமக்கு உடம்பிலோ அல்லது மனதிலோ ஏதாவது பிரச்சினை இருப்பின் அதற்காக சிகிச்சை பெற மார்க்க அறிஞர்களை நாடும் முறையை கவனிப்போம்.

🔮முதலாவதாக நாம் நாடிச்செல்பவர்கள் நபி வழிப்படி நடப்பதாயின் அதில் எவ்வித தவறுமில்லை. அதாவது எமது நபியவர்கள் கூறிய ருக்யா முறையில் அவர்கள் தீர்வு காண முயற்சி செயற்படுபவர்கள் ஆயின் அதில் எவ்வித பிழையும் இல்லை. என்றாலும் எமது நோய்க்கு அல்லது மன உளைச்சலுக்கு நாமே ருக்யா செய்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.ஏனெனில் முக்கியமாக நாம் அல்லாஹ்வின் மேல் தவக்கல் வைத்து நமது பிரச்சினைகளை கூறி அவனிடமே அதற்கு தீர்வை தருமாறு துஆ கேட்கிறோம். நேரடியாகவே நாம் நம்மை படைத்த அல்லாஹ்வை நாடுகிறோம்.அவன் படைத்த ஒவ்வொருவரின் குறைகளையும் அவனாகவே கேட்பான் எமது துஆக்களையும் ஏற்றுக்கொள்ளுவான்.நிச்சயமாக தனிப்பட்ட ஒவ்வொருவரின் துஆக்களுக்கும் பதில் அளிக்க கூடிய வல்லவன் அந்த அல்லாஹ்வை தவிர யாருமில்லை. நபியவர்கள் கூறிய முறையில் நாமே நமக்கு ருக்யா செய்து கொள்வது சிறந்ததாக அமையும். மார்க்க அறிவுள்ளவர்களை நாடி செல்வது தவறல்ல ஆயினும் தவிர்ப்பது நல்லது.

💡இரண்டாவதாக நீங்கள் தீர்வுக்காக நாடி செல்பவர்கள் இஸ்லாத்துக்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு வருபவர்கள் ஆயின் அவர்களை நாடுவது உங்களை பிழையான வழியில் இட்டுச்செல்லும். ஜின் வசப்படுத்தல், பிராணிகளை குர்பானி செய்தல், இன்னும் தாயத் கட்டுதல் போன்ற பல இஸ்லாம் கூறாத வழிமுறைகளை கையாளும் நபர்களை நாடி நமது பிரச்சினைகளுக்கு தீர்வை நாடி செல்வது ஹராமானது ஆகும்.

🔮ஜின்னை தன் வசப்படுத்தி நமது கஷ்ட நிலையை தீர்த்து வைப்பதாக கூறுவார்கள். ஆனால் அது அவ்வாறல்ல. ஜின்களே அவரை அதன் வசம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். ஜின்கள் தன்னை நாடி வரும் மனிதர்களிடம் தனக்கு வேண்டிய இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத செயல்களை செய்ய வைத்து அதற்கு பதிலாக அவர்களுக்கு தாம் உதவி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொள்ளும். (இங்கு ஜின்கள் தன்னை ஸுஜூது செய்யுமாறு பணிக்கும் நிலை கூட உள்ளது) நாம் நாடி செல்பவர்கள் எமக்கு கூறும் அறிவுரைகளை வைத்து எமக்கு இவற்றை விளங்கிக் கொள்ள முடியும். இவர்கள் தரும் தாயத் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதில் எழுதி உள்ள மொழி நாம் அறியாததாக இருக்கும். அல்லது ஷைத்தானை அழைக்கும் ஒரு பெயராகவும் இருக்கலாம்.

💡இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களை கையாள்வதால் அது எம்மை குப்ர் இலே இட்டுச்செல்லும். இவை அனைத்தும் எம்மை ஷிர்க்கின் பக்கம் எடுத்து செல்கிறது. மற்றது நாம் தேடிப் போகும் நபர்கள் தீர்வினை தருவார்கள் என நம்பிக்கை கொள்வதால் அல்லாஹ்வை இங்கு மறந்து விடுவது போன்றதாகி விடுகிறது. இதனை வைத்து எமக்கு நோய் ஏற்பட்டால் வைத்தியரை நாடக்கூடாது என்பது அர்த்தம் அல்ல.எமக்கு ஏதும் நோய் இருப்பின் அதற்காக சிகிச்சை பெற ஒரு வல்லுனரை நாடவே இஸ்லாம் கூறுகிறது.

📗ஸஹீஹ் அல் புஹாரி #5678 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

🔮நமக்கு நோய்வாய்ப்பட்டால் வைத்தியரை நாடுவது நமது கடமையாகும். நோயை அறிந்து நிவாரணம் பெறவே வைத்தியரை நாடுகிறோம். மன உளைச்சல் காரணமாகவோ அல்லது உடம்பின் நோய்கள் காரணமாக வைத்தியரை நாடுவதும் மார்க்க அறிஞர்களை நாடுவதிலும் பெரிய வித்தியாசம் உண்டு. வைத்தியர் உடல் சார்ந்த நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை தந்து குணப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். அதனை தீர்வாக எடுக்கும் போது இது ஒரு வழிமுறையே தவிர ஷிபாஃ அல்லாஹ்விடத்தில் இருந்து கிடைக்கும் என நினைப்பது அவசியம்.

💡இதே போன்று நாம் மார்க்க அறிஞர்களை நாடும்போது ஆன்மீக நிலையே பாதிப்புக்கு உள்ளாகிறது.எமது ஈமான் இதில் கூடுதலாக சம்பந்தப்படுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. காரணம் நாம் நாடுபவர்கள் தரும் சிகிச்சை உடல்ரீதியானதாக இருக்காது. ஏதோ ஒரு புரியாத நிலமையிலே அது அமைந்து இருக்கும். அப்படியும் அதன் மூலம் அல்லாஹ்வின் கத்ர் யைக் கொண்டு தீர்வை பெற்றுக்கொண்டாலும் இங்கு அல்லாஹ்வே நினைக்க மறந்து விடுவோம்.எம்மை சுகப்படுத்திய அந்த நபரையே கூடுதலாக நம்ப முற்படுவோம்.

🔮நாம் இல்முல் கய்ப்(மறைவான ஞானம்) யைப்பற்றி யோசித்து பார்க்க வேண்டும். நமது பெயரைக் கொண்டு அவர்கள் தீர்வு தருவது என்றும் பொருந்தாதது.மறைவானவற்றை அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இவ்வாறான விடயங்களில் நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

📕ஸஹீஹ் அல்-முஸ்லிம்# 4137
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா(ரலி)

💡குறி கூறுபவர்களும் தமக்கு மறைவானது தெரியும் என்ற ரீதியிலே செயல்படுபவர்கள் ஆவார்கள். இவ்வாறு தான் இஸ்லாத்துக்கு முரணாக செயல்படும் மார்க்க அறிஞர்களும் தமக்கு மறைவானது விளங்குவது போன்றே சிகிச்சை அளிப்பதில் வல்லமை கொண்டவர்கள் ஆவார்கள்.

📙அஹ்மத் # 9171
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சூனியக்காரனிடமோ, ஜோசியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி )

🔮சுபஹானல்லாஹ் மேற்கூறிய ஹதீஸ்களை அவதானித்தால் இவ்வாறான விடயங்கள் எம்மை குப்ர் இன் பக்கமே இழுத்துச் செல்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் ஜின்னுடனான தொடர்பு எவ்வித்திலும் நன்மையை தரப்போவதில்லை. நாம் நினைத்தும் பார்க்க முடியாத விளைவுகளையே அது தரும்.

📗ஸஹீஹ் அல்-புஹாரி# 6472
📕ஸஹீஹ் அல்-முஸ்லிம்# 220
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்”.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

💡மேற்கூறிய ஹதீஸை கொண்டு நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் மற்றவர்களை நாடாது நாமே எமக்கு ருக்யா செய்து கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அவ்வாறான நிலையில் எமக்கு சுவனம் செலவதற்கான வழியையும் அது பெற்று தரும். ஆகவே அல்லாஹ்விடம் பூரண நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்த நிலையில் நபி வழி காட்டிய ருக்யா முறையை நாம் செய்து கொள்ள வேண்டும். இன்னும் எம்மை சார்ந்தவர்கள் எமக்காக, சொல்லப்பட்ட முறையில் ருக்யா செய்தால் அதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே கருதப்படுகிறது. ஆகவே மார்க்க அறிஞர்களை நாடுவது விலக்கப்படாதது என்றாலும் தவிர்க்க பட வேண்டியது என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ🌷